Sunday, November 28, 2010

நந்தலாலா - அன்பின் பயணம்!

நந்தலாலா - ஒரு மனப்பிறழ்வு கொண்டவனும், ஒரு சிறுவனும், தத்தம் தாயைத் தேடி செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்களும் அங்கு நடக்கும் சம்பவங்களும் தான் கதை. அவர்களின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை தயவு செய்து திரை அரங்கில் சென்று பார்க்கவும். அதுவே இந்த மாதிரி நல்ல படத்திற்கு நாம் செய்யும் மரியாதை.பாஸ்கர் மணி என்ற பாத்திரத்தில் மிஷ்கின். படத்தின் ஒரு காட்சியில் கூட மிஷ்கின் என்ற தனி மனிதன் நம் கண்ணுக்கு தெரிவதில்லை மாறாக அந்த கதாபாத்திரமே நமக்கு தெரிகிறது. இது அவரின் நடிப்புக்குக் கிடைத்த பெரும் வெற்றி.ஒரு மன நல காப்பகத்தில் இருந்து தப்பி வெளியே வருகிறார், தன்னை அங்கே சேர்த்து விட்டு சென்ற அம்மாவின் மீது கடும் கோவத்துடன். அம்மாவின் கன்னத்தில் ஒரு அறையாவது அறையவேண்டும் என்று.

அகிலேஷாக மாஸ்டர் அஸ்வத் ராம்.மிகச்சரியான தேர்வு, என்னதான் இயக்குனரின் பங்களிப்பு இருந்தாலும் அந்த உணர்வுகளை வெளிக்கொணர்வதில் அஸ்வத்தின் நடிப்பு அபாரம்.நிறைய புத்திசாலித்தனத்துடன் அதே சமயம் தான் எடுத்த காரியத்தில் உறுதியாய் இருக்கும் ஒரு பாத்திரப் படைப்பு.நல்ல வேளை, வயதுக்கு மீறிய வசனங்களோ காட்சியமைப்போ இல்லை. சிறு வயதில் தன்னை பாட்டியிடம் விட்டுச் சென்ற அம்மாவை கண்டுபிடித்து அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் அம்மாவின் ஊருக்கு செல்கிறான்.

அஞ்சலி எனும் விலைமாதாக ஸ்னிக்தா.என்ன ஒரு உருமாற்றம்! மொட்டைக் கல் கூட கிடைக்கும் சிற்பியின் கைவண்ணத்தை பொறுத்து உயிர் உள்ள சிலையாய் உருப்பெறும். அது போலத்தான் ஸ்னிக்தாவும்! "கத்தாழ கண்ணால" என்று இடுப்பை ஆட்டி கொண்டிருந்தவர் அருமையான நடிப்பால் நம் நெஞ்சங்களை ஆட்டுகிறார்.

இப்படி மூன்று பாத்திரங்களும் இணையும் மையப்புள்ளியை சுற்றி கதை சுழல்கிறது. 

இது தவிர இன்னும் படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் நம்முடன் வருகிறார்கள். அஸ்வத்திடம் அடிக்கடி பணம் வாங்கும் அந்த வேலைக்காரப் பெண், சைக்கிளில் இருந்து கீழே விழும் அந்த பள்ளி பெண், இளநீர் வியாபாரி, லாரி டிரைவர், போலீஸ், அந்த மிலிட்டரி இரட்டையர்கள், தேனிலவு தம்பதிகள், அவர்களிடம் வம்பு செய்யும் அந்த பைய்யன்கள், கால் ஊனமுற்றவனும் அவனுக்கு வைத்தியம் பார்க்கும் அந்த டாக்டரும், அந்த "ஷோக்கு" தாத்தா, அஸ்வத்தின் அம்மா, 12 வினாடிகள் வரும் நாசர், மிஷ்கினின் அம்மாவாக ரோகினி இப்படி படத்தில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட நம்மில் சிறு பாதிப்பை ஏற்ப்படுத்துகிறார்கள். 

15 நிமிடம் மட்டும் வரும் ஒரு பாத்திரத்துக்கு மொட்டை எல்லாம் அடித்து ரோகினி காட்டியிருக்கும் அர்ப்பணிப்பு சிலிர்க்க வைக்கிறது. அது ரோஹிணிதான் என்பதே பலருக்கு தெரியவில்லை, சூடம் ஏத்தி சத்தியம் செய்தும் என்னுடன் படம் பார்த்த நண்பர்கள் நம்பவில்லை, அவர்களை சொல்லி குற்றம் இல்லை... ஒரு குளோஸ்-அப் காட்சி கூட இல்லை ரோஹிணிக்கு.

இன்னொரு சிறந்த பாத்திரம் அந்த லாரி டிரைவர். லாரியில் ஹாரனை திருடியதற்காக மிஷ்கினை வாழைத் தாரால் அடித்துவிட்டு பின் அவரை பற்றி தெரிந்த உடன் அன்பு பாராட்டும் அந்த காட்சி ஒரு மிகச்சிறந்த சிறுகதை. அன்பால் நாம் இணைக்க முடியாத இடைவெளி எதுவுமே இல்லை என்பதை அழகா சொல்கிறது அந்த சிறிய எபிசொட். இது ஒரு சின்ன சாம்பிள், அவ்வளவே! படம் முழுவதும் இது போன்ற கவிதைத் தோரணங்கள் நிறைந்திருக்கிறது.

ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி. மிஷ்கினின் இன்னொரு கண்ணாக படம் முழுவதும் பயணிக்கிறார். கேமரா மூலம் விந்தைகளை செய்யத் தேவை இல்லை... இயல்பாய் இருந்தாலே அழகுதான் என்று ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஒரு பெரிய சல்யூட் அவருக்கு.

இப்படி ஒரு படம் எடுத்ததற்காக அய்ங்கரன் நிறுவனத்தார் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! அவர்களின் பெயரை காலம் முழுவதும் சொல்ல இந்த படம் ஒன்று போதும்.நன்றி!

நல்ல படம் கொடுப்பதில் மிஷ்கினுக்கு இருக்கும் ஆர்வம் நல்ல சினிமா ரசிகர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். அந்த டைட்டில் ஒன்றே நாம் ஒரு வேறு விதமான படத்திற்கு வந்திருக்கிறோம் என்பதை கூறி விடுகிறது. அதன் பின் நம் கண் முன்னே விரிவதேல்லாம் மனித உணர்வுகளும் அது உள்ளடக்கி வைத்திருக்கும் ஆச்சரியங்களுதான். இயக்குனர் நடிகராய் இருப்பது இந்த படத்திற்கு கிடைத்த பொக்கிஷம்... தன் மனதில் இருப்பதை அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கிறார். எந்த விதமான ஹீரோயிசத்துக்கும் ஆட்படாமல் அந்த பாத்திரத்துக்கு தேவையானதை மட்டும் கொடுத்திருக்கிறார். அவர் வாழ்ந்திருக்கும் சில குறிப்பிட்ட காட்சிகள், தன் அம்மாவைக் காணும் காட்சி, அந்த தாத்தாவும் அவருடன் வந்தவர்களும் அடிக்கும் போது அங்கு வரும் மிலிட்டரி நண்பரகளிடம் ஓடி சென்று குதிக்கும் காட்சி( முதுகை மட்டுமே காட்டி உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பார்), அஸ்வத்தின் அம்மாவை அறையும் காட்சி, தன்னை மெண்டல் என்று கூறிய அஸ்வத்தை ஒன்றும் செய்ய முடியாமல் இயலாமையுடன் கதறும் காட்சி.

அஸ்வத் ஸ்னிக்தாவை முத்தமிடும் போதே படம் முடிந்தது, அதற்க்கு பின்பான காட்சிகள் சராசரி ரசிகர்களுக்காக என மிஷ்கின் நினைத்து விட்டாரோ என்னவோ. அஸ்வத்திடம் அவன் அம்மாவை பற்றி சொல்லும் காட்சியிலே அவர் தெளிவாகி விட்டார் என எல்லாருக்கும் புரிந்திருக்கும். அது போல், முடிவில் அந்த சிறுவன் எடுக்கும் முடிவு கொஞ்சம் பெரியவர்களே எடுக்க திணறும் முடிவு!

இளையராஜா - என்ன சொல்ல நான் இவரைப் பற்றி! கட முடவென டிரம்சை உருட்டுவதல்ல பின்னணி இசை, தேவைப் படும் நேரத்தில் மௌனியாய் இருப்பது கூட நல்ல பின்னணி இசைதான்! ராஜாவின் உழைப்புக்கு இன்னும் ஒரு தேசிய விருது நிச்சயம். அந்த விருதை எல்லாம் விட உயர்ந்த விருது "தாலாட்டு கேட்க்க நானும்" எனும் ராஜாவின் குரல் ஒலிக்கும் போது திரை அரங்கில் ரசிகர்களின் கண்களில் வழியும் நீர்! இதற்க்கு மேல் என்ன வேண்டும்.... ராஜாவின் இசை இல்லாமல் இந்த படம் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தி இருக்குமா என்பது சந்தேகமே! அந்த கடைசி கால் மணி நேரம் என் கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது...  அன்னாரின் இசைக்கு இந்த உலகமே அடிமை!

டைட்டிலில் முதலில் இளையராஜாவின் பெயரும், பின் தொழில் நுட்பக் கலைஞர்களின்   பெயரும்,   பின் நடிகர்களின் பெயரும்!!!! அது போல் பட விளம்பரங்கள், சுவரொட்டிகளிலும் "நந்தலாலா"வின் கீழ் இளையராஜா, அதற்க்கு கீழ் மிஷ்கின்! அவர் அமைத்துக் கொடுத்த எல்லாப் பாடல்களையும் படத்தில் உபயோகப் படுத்திருந்தால் ராஜாவிற்கு இன்னும் மரியாதையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

நந்தலாலா - அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

டிஸ்கி 1 : தேவி கருமாரி அரங்கு சீரமைத்த பின் இப்போதுதான் முதல் முறையாக செல்கிறேன். அரங்கு பாதி கூட நிரம்பவில்லை, வருத்தம்தான்! இந்த படத்தின் வெற்றி மட்டுமே இது போன்ற படங்களை எடுக்க தயாரிப்பளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்.

டிஸ்கி 2 : இது "கிகுஜிரோ " எனும் ஜப்பானிய படத்தின் தழுவல் என்று பலர் கூறினாலும், உலக சினிமா அறிவு இல்லாத சாமானிய ரசிகர்களாகிய எங்களுக்கு இந்த மாதிரி ஒரு படமே உலக சினிமா.

நட்புடன், 

உங்கள் நண்பன் சிவா
பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

9 comments:

 1. நல்ல விமர்சனம்! ;-)

  ReplyDelete
 2. அழகான தொகுப்பு

  ReplyDelete
 3. ஆம்... பிற பாடல்களை இணைக்காததில் எனக்கும் வருத்தம் தான்...

  ReplyDelete
 4. இன்னும் பார்க்கல பாஸ்! பார்த்திடுறேன் :)

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம்!

  ReplyDelete
 6. //இது "கிகுஜிரோ " எனும் ஜப்பானிய படத்தின் தழுவல் என்று பலர் கூறினாலும், உலக சினிமா அறிவு இல்லாத சாமானிய ரசிகர்களாகிய எங்களுக்கு இந்த மாதிரி ஒரு படமே உலக சினிமா.//

  உண்மையான வரிகள்..!!!

  ReplyDelete
 7. நன்றி RVS, Nis, எஸ்.கே.

  சீக்கிரம் பாருங்க பாலா!

  நிச்சயமாக பெரிய வருத்தம் பிரபாகரன்!

  நன்றி வெற்றி!

  ReplyDelete
 8. trailer இல் அழகான அமைதியான் தீம் மியூசிக் இல் ஒரு டூ wheeler இல் மிஸ்கின் முன்னாடி உட்கார்ந்துட்டு..அந்த பையன் பின்னாடி இருந்துட்டு ஒருத்தர் வண்டி ஓட்டிட்டு போவார்...என்னவோ அழகான கவிதை மாதிரி இருந்தது..உங்க விமர்சனம் பார்த்து படம் பூராவுமே கவிதை தான்னு புரிஞ்சுட்டேன்..நன்றி சிவா...))

  ReplyDelete
 9. நன்றி ஆனந்தி! கண்டிப்பா படம் பாருங்க!

  ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!