Friday, September 3, 2010

இளமை காலங்கள் - கபடியும் கலாட்டாக்களும்!!!

"ஒரு ஊருலே ஒரு ராஜா இருந்தான், அவன் ஒரு நாள் ...." அப்படின்னு கோர்வையா சொல்ற கதை இல்லை என்னோட சாரி எங்களோட இளம் பிராயம். இதிலே எங்களோட சொன்னது என்னோட நண்பர்களையும் சேத்துதான், ஏன்னா அவங்க இல்லன்னா இளமையும் இல்லை கலாட்டாவும் இல்லை... எப்போதுமே பிளாஷ்பேக்தான் செம ஹிட்டாவும் வெயிட்டாவும் இருக்கும், சினிமால கூட ! இந்த நிமிஷம் காலபைரவன் வந்து என்ன வேணும்னு கேட்டா, தயவு செஞ்சு கால சக்கரத்தை பின்னோக்கி சுத்தி அந்த டீன்-ஏஜ் பருவத்தை உடனே குடுத்துருன்னு கேப்பேன்... நான் மட்டும் இல்லை நம்ம எல்லோருமே தான் கேப்போம்!சின்ன வயசுலே இருந்தே கபடின்னா ஒரு தனி வெறிதான்.... நம்ம தம்மாத்தூண்டு இருக்கும் போதே நம்மளை விட தம்மாத்தூண்டு பசங்கள கூப்பிட்டு, டே! அண்ணன் ரைடு வர்றேன் எங்கே புடிங்க பாப்போம்னு நம்ம தெறமய காமிக்கிறது ;-) அப்புறமா சரியா சொல்லனும்னா ஒரு பதினாறு அல்லது பதினேழு வயசுலதான் கொஞ்சம் சீரியசா கபடி விளையாட ஆரம்பிச்சது... எங்க டீமோட பேரு "வேங்கை கபடி குழு"... எங்களோட டீம் பனியன்லே அப்படியே ஒரு புலியோட தலைய சின்னமா பொறிச்சிருப்போம், அந்த பனியனை விளையாடும் போது மட்டும் இல்லாம சும்மா கூட போட்டுட்டு சுத்துன காலம்லாம் இப்போ நெனச்சாலும் ஏதோ நேத்து நடந்தா மாதிரி இருக்குது. எல்லோரும் பாத்துக்குங்க நான் ரவுடி, ரவுடி, ரவுடினு போலீஸ் ஜீப்புலே ஏறிட்டு வடிவேலு சொல்வாரே அந்த மாதிரி, அந்த பனியனை போட்டுட்டு அப்படியே இறுமாப்போட நாங்களும் கபடி ப்ளேயர்லேனு ஊரெல்லாம் சுத்த வேண்டியது....

இதுலே ஹைலைட் என்னன்னா எங்க டீம் டோர்னமென்ட் நடத்தும்போது நாங்க விளையாடுற மாட்சுக்கு முன்னாடி ஆடுகளத்துலே வலம் வரும் போது கரெக்டா "தூங்காதே தம்பி தூங்காதே" படத்துலே வர்ற "வருது வருது விலகு விலகு, வேங்கை வெளியே வருது"ங்கிற பாட்டை வேற போட்டுருவோம் (ஹீ ஹீ எல்லாம் ஒரு விளம்பரம்தான்) அந்த நேரத்திலே அப்படியே ஏதோ நாமளே நம்மளை வேங்கைனு நெனச்சிக்கிறது (நான்லாம் மனசுக்குள்ளே அப்படியே புலி மாதிரி உறுமிலாம் பாத்திருக்கேன்). நல்ல வெளயாடுறமோ இல்லையோ குடுப்போம் பாரு ஒரு சவுண்டு, ஒரு ரெண்டு பொண்ணுங்க இருந்துட்டா போதும் அப்படியே ஒரே பாச்சல்தான், சில சமயம் எதிர் டீம் காரன் நம்மள அப்படியே தூக்கி வெளியே எறிஞ்சிருவான்; அப்பவும் வெளியே வந்து உக்காந்து அங்கே ஒரு சின்ன குழி இருக்கு மக்கா, காலு சிலிப்பாயிடிச்சுனு சமாளிக்க வேண்டியது! இல்லாத மீசைலே கூட மண்ணு ஒட்ட கூடாதுன்றதுல ரொம்ப உறுதியா இருப்போம் .....

சனி, ஞாயறு வந்தா போதும் சுத்து வட்டாரத்துலே கண்டிப்பா எங்கேயாவது மேட்ச் நடக்கும்... நம்ம டீமுக்கு அழைப்பு வந்தாலும் இல்லாட்டியும் போயி கமிட்டி மெம்பெர்ஸ் கிட்டே "அண்ணே! ஏதாவது டீம் வரலன்னா நாங்க ஆடுறோம்னேனு" கெஞ்சி கூத்தாடி ஆடிர்ற வேண்டியது... பக்கத்து ஊரா இருந்தா சைக்கிள், கொஞ்சம் தள்ளி இருக்குற ஊரா இருந்தா, நம்ம ஊருலே இருக்குற மத்த டீம்கள் கூட சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு தெரிஞ்ச வேன்ல ( அப்போலாம் மஹிந்திரா தான்) கெளம்பிருவோம். விடிய விடிய நடக்கும், நைட்டுலே நடக்குற மாட்ச்க்கு"மின்னொளி" கபாடி போட்டிம்பாங்க. சில சமயம் காலையிலே பொழுது விடிஞ்ச பெறகு கூட கண்டினியூ ஆகும், அந்த ஊருலே ஒருக்கிற மைக் பிரியர்கள் உடனே ஆரம்பிச்சிருவாங்க "மின்னொளியில் ஆரம்பிச்ச இந்த போட்டி விண்ணொளியிலும் தொடர்கிறதுனு". எந்த ஊருக்கு போனாலும் இந்த வசனம் இல்லாம ஒரு டோர்னமென்ட் நடக்கவே நடக்காது!

ஒவ்வொரு டீம்லேயும் ஒரு மேனேஜர் இருப்பாரு, உண்மையா சொல்லனும்னா கபடி மேலே நல்ல ஆர்வத்தோட அதே சமயம் கபடி விளையாட தெரியாதவரை தான் அப்படி ஒரு போஸ்ட் குடுத்து வெச்சிருப்போம்... முக்கியமான விஷயம் நமக்கு என்ட்ரன்ஸ் பீசுலே இருந்து மேட்சுக்கு கூட்டிட்டு போற காசு வரைக்கும் குடுக்கிறவரா இருக்கணும்... அதுதான் பெரிய குவாலிபிகேஷன்! அவரு என்ன சொன்னாலும் கேட்டுப்போம், என்னலே வெளயாடுதே, இதுக்கு நானே தேவலாம்னு சொன்னா கூட "அண்ணே! இது சின்ன டீம்னே நாங்களே பாத்துப்போம்னு" ஐஸை தூக்கி தலையிலே வெச்சிர வேண்டியது... இதெல்லாம் மேட்ச் நடக்குற அன்னைக்குதான்! அப்புறம் அடுத்த மேட்சுக்குத்தான் மேனேஜரை தேடுவோம்...

இதெல்லாம் சும்மா ஒரு முன்னோட்டம்தான்.... நாங்க ஆடுன மேட்சுகளையும் அதுலே நடந்த சுவாரசியங்களையும் அடுத்த பதிவிலே பாக்கலாம்....


நட்புடன்,

சிவா.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்(இன்டலியிலும் இணைத்துள்ளேன்)! உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்!!

12 comments:

 1. சிறு வயது ஞாபகங்கள் என்றாலே ஒரு தனி சுகம்தான்!

  ReplyDelete
 2. சத்தியமான உண்மை எஸ்.கே.

  ReplyDelete
 3. இந்த கபடி கலாட்டாக்கள் நெல்லை மாவட்டத்தில் தான் அதிகமாக இருந்தது. இப்போது போலிஸாரால் தடை செய்யப்பட்டுள்ளது. நானும் நெல்லை தான்.

  ReplyDelete
 4. கபடி விளையாட்டை தடை செய்வது தீர்வு அல்ல! சரியான விதிமுறைகளை வகுத்து அதை மீறாமல் விளையாட்டை நடத்த செய்ய வேண்டும்... எப்போ, எங்கே நடந்தாலும் இந்தியா கண்டிப்பா ஜெயிக்கிறது கபடி மேட்ச்லதான். வருகைக்கு நன்றி drbalas & வெறும்பய!

  ReplyDelete
 5. மிகவும் அருமையான நினைவுகள் சிவராம்குமார்..

  ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க உங்களுடைய அனுபவத்தை.. நல்ல சுவாரஷ்யமா இருந்தது.. தொடர்ந்து எழுதுங்க..

  ReplyDelete
 6. வலைப்பூவின் தலைப்பு நல்லாயிருக்கு..

  ReplyDelete
 7. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி பாபு...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... தலைப்பு மட்டும்தான் நல்லா இருக்கா அஹமது... தங்கள் வருகைக்கும் நன்றி!

  ReplyDelete
 8. // அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... தலைப்பு மட்டும்தான் நல்லா இருக்கா அஹமது... //

  "தலைப் பூ" எல்லாமே அழகாகத் தானிருக்கும் பாஸ். இப்படிச் சொன்ன உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே. ஹி..ஹி..

  அருமையான பதிவுகள். தொடர்ந்து எழுதுங்கள். ஏன் இவ்வளவு டிலே அடுத்தப் பதிவுக்கு!! வாரம் ரெண்டாவது போடுங்க பாஸ் !!

  ReplyDelete
 9. நன்றி அப்துல் காதர்! கண்டிப்பா ட்ரை பண்றேன்! கொஞ்சம் வேலை இருப்பதால் எழுத வேளை இல்லை...

  ReplyDelete
 10. machi super da... nama pulavanpatti and brammadesam match pathi konjam eluthuda

  ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!