Tuesday, August 24, 2010
நான் மகான் அல்ல - என் பார்வையில்!
வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரனின் இரண்டாவது படைப்பு! அதற்காகவே இந்த படத்தை பார்ப்பது என்று முடிவு, காரணம் அவரது முதல் படம் என்னை கை பிடித்து என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்றது! கபடி மேட்ச் நடக்கும் போது எல்லோருடைய துணியையும் ஒரு லுங்கியில் பொட்டலமாக வைத்து கொண்டு பின்னாடி நின்னுகிட்டு " அண்ணே! இப்பிடி புடி.. அவனை அப்படி மடக்குனு" மாரி சொல்வானே... அதெல்லாம் அப்படியே எங்க செராக்ஸ். என்ன ஒரு வித்தியாசம் மாரி படத்தோட ஹீரோ அதனால பெரிய கபடி பிளேயர் ஆயிருவான் .. நாங்களும் விளயாண்டோம் ஆனா.... சரி விடுங்க எதுக்கு!!!
நான் மகான் அல்ல - கதையென்று பார்த்தால் அப்பாவை கொன்றவர்களை பழி வாங்கும் ஒரு சாதாரண கதைதான். அந்த கதையில் இன்றைய நிதர்சனத்தை அழகாக புகுத்தி பொளேரென்று நெத்தி பொட்டில் நம்மை அடிக்கிறார் இயக்குனர்.
கால் டாக்ஸி டிரைவர் அப்பா, அன்பான அம்மா, ஒரு அழகான தங்கை என ஒரு சிறியகுடும்பம் கார்த்தியுடையது. எல்லா வயசு பசங்களை போல ஜாலியா சுத்திக்கிட்டுஇருக்கிற கார்த்தியோட வாழ்கையிலே பார்த்தவுடன் காஜல் மேலேகாதல்.இப்படி அழகா போற வாழ்க்கை, அப்பா ஒரு கொலைக்கு சாட்சி சொல்லபோகும் போதிலிருந்து தடம் புரள்கிறது. பின்பு நடப்பவை எல்லாம் நம் இதயதுடிப்பை கன்னா பின்னாவென எகிற வைக்கும் சம்பவங்கள்... இப்படியெல்லாம்கூட படிக்கிற பசங்க இருக்காங்களானு பதை பதைக்குது நெஞ்சு!
பருத்தி வீரனுக்கு பிறகு கார்த்திக்கு புகுந்து விளையாட ஒரு களம். நையாண்டி, நக்கல், காதல், பாசம், சோகம், வெறி எல்லாம் கலந்து கட்டி பட்டைய கெளப்பி இருக்கார். காஜலுடன் கடலை போடுவது, அவங்க அப்பாவிடம் போய் அவதான்அங்கிள் முதல்லே ப்ரொப்போஸ் பண்ணா அதன் வந்தேன்னு கலாய்ப்பது, அவங்க அப்பா மிரட்ட கூப்பிட்டு வந்த ரௌடியுடன் பிரண்டாவது, அப்பாபாக்கெட்லே காசு எடுத்துட்டு அதை ஜாலியா நண்பர்களோட செலவு பண்றதுஎன முதல் பாதி முழுக்க இளமை பட்டாசு. பின் பாதியிலே, அப்பா இறந்தவுடன்வெறி கொண்ட வேங்கையாக அவரை கொன்றவர்களை பழி வாங்க அலைவதுஎன படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் கார்த்தி!
கதாநாயகியாக காஜல்! பெரிதாக வேலை இல்லையென்றாலும் அழகு! பின்பாதியின் கதையோட்டத்தில் இவர் இல்லை என்பதே உறைக்கவில்லை।
கார்த்தியின் அப்பாவாக் ஜெயப்ரகாஷ்... எங்கே இருந்தார் இந்த மனிதர்! "பசங்க" பாண்டிராஜுக்கு முதல் நன்றி. மனிதர் பாதி விசயங்களை பார்வையிலே சொல்லி விடுகிறார். எங்க அப்பாவை விட ஜீவா நல்லவன் என்று சொல்லும் காஜலிடம்இருபத்தி இரண்டு வருஷம் அவன் கூட குடும்பம் நடத்திட்டு இதை சொல்லு நான்சந்தோஷ படுறேன்னு சொல்லும் பொது கிளாஸ். அம்மாவாக லக்ஷ்மிராமகிருஷ்ணன், தங்கையாக ப்ரியா தங்கள் கதாபாத்திரத்தை நிறைவா செஞ்சிருக்காங்க . நண்பர்கள் கூட்டத்திலே சூரி தன்னோட ஒன் லைனர் மூலமாக முதல் பாதி கலகலப்பாக நகர உதவிசெய்றார்.
அப்புறம் அந்த நாலு காலேஜ் பசங்க, எங்கே புடிச்சாங்கப்பா அதில் அந்த பெரிய கண் உள்ள பையனும்எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு மண்டைய பிச்சிகிட்டேன், அப்புறம் ஒரு நண்பன்தான்சொன்னான் நந்தாவிலே வர்ற சின்ன வயசு சூர்யாடா னு) தலை முடி அதிகமா உள்ள பையனும்அசத்தல் . கிளைமாக்ஸ்லே அவங்க கண்ணுலே தெரியிற வெறி, குரூரம் அப்படியே டிஸ்கவரிசேனல்ல பாக்குற ஓநாய் மாதிரி உடம்பு ஒரு நிமிஷம் சிலிர்த்தது. சின்ன சின்ன கேரக்டர்ஸ் கூடபார்த்து பார்த்து செலக்ட் பண்ணி இருக்கார் இயக்குனர், அது தான் படத்தோட மிக பெரிய பலம்.
படத்தோட பின்புலத்திலே யுவன் ஷங்கர் ராஜாவோட இசையும், மதியோட ஒளிப்பதிவும் பெரியபிளஸ். சிறகை போலே பாடலில் இசை அமைப்பாளரை விட பாடகர் யுவன் பளிச்சிடுகிறார். கடைசிசண்டை காட்சியில் பின்னணி இசை, ஒளிப்பதிவு, அனல் அரசுவின் பயிற்சி எல்லாம் ஒன்றோடுஒன்று போட்டி போடுகிறது.
இயக்குனர் சுசீந்திரன் ஒரு கமர்சியல் கதையை கையில் எடுத்தாலும், அதை தன்னால் முடிந்தஅளவு யதார்த்தமாக கொடுத்திருக்கார் . ஒரு ( பழிவாங்கிற கதைய நம்ம இயக்குனர்கள் கிட்டேகொடுத்தா அப்படியே ஒரு காரமான சிக்கன் குழம்புக்கு தேவையான மசாலாவை அரைச்சுகொடுத்திருப்பாங்க, ஆனா இந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட்லே தான் நம்மள கட்டி போடுறார்சுசீந்திரன். ஹீரோவுக்காக சின்ன சின்ன விஷயங்களலே யதார்த்த மீறல் இருக்கு. கிளைமக்ஸ்லேஒரு பெரிய தாதா கையிலே கத்தியோட இருந்தும் அந்த நாலு பசங்கள சமாளிக்க முடியாம செத்துபோறாரு, ஆனா ஹீரோ வெறும் கையிலே நாலு போரையும் புரட்டி எடுக்கிறார், அப்புறம் அப்பாஇறந்தவுடன் ஒரு பார்முலா பாட்டு இதெல்லாம் தவிர்த்து இருக்கலாம்.
Neverthless, நான் மகான் அல்ல - பார்க்க வேண்டிய படம்.
அப்புகுட்டிய ஹீரோவா போட்டு அடுத்த ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணிட்டாரு சுசீந்திரன். அழகர்சாமியின் குதிரை வெற்றி வலம் வர சுசீந்திரன் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு வாழ்த்துகள்.
இது என்னுடைய முதல் திரை விமர்சனம், தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
//Neverthless, நான் மகான் அல்ல - பார்க்க வேண்டிய படம்.//
ReplyDeleteஉங்களுடைய முதல் விமர்சனத்திற்கு....
வாழ்த்துக்கள்....
நான் மகான் அல்ல -(யார்) பார்க்கவேண்டிய படம் ?
ஆகாய மனிதன் - என்னோட கணிப்பில் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் ;-)
ReplyDeleteநல்ல விமர்சனம்!
ReplyDeleteநன்றி எஸ்.கே
ReplyDeleteமுதல் விமர்சனம் போலவே தெரியவில்லை. மிக அருமை!
ReplyDeleteமிக்க நன்றி bandhu...
ReplyDelete