Thursday, August 19, 2010

ஜங்ஷன் - டவுன் - தச்சநல்லூர்

இதோ வந்துருவேன் இப்போ வருவேன்னு வானம் போக்கு காட்டி கொண்டிருந்தது; கடைசி டிரெயின் போறதுக்குள்ளே ஸ்டாண்டுக்கு போகணுமே... நேரம் வேற ஆயிருச்சு, அதுவும் போச்சுன்னா அவ்ளோதான்னு நெனசிகிட்டே சர்ரென்று ஆட்டோவை வெரட்டுனான் கதிரு.



கரெக்டா ஸ்டான்டுக்குள்ளே நுழையவும் எதுதாப்புலே வந்த மாடசாமி , ஏலே மக்கா! ஏமூடே லேட்டு... வண்டிஎல்லாம் போச்சே.. தூங்கி தொலைசிட்டியானு கேட்டான். அட நீ வேற நேரமே சரி இல்லைடே... புள்ளைக்கு உடம்புக்கு சரி இல்லை ராத்திரி பூரா அனத்திகிட்டே இருந்தா, கையிலே காசும் இல்லை என்ன பண்றதுன்னே தெரியலை மாப்ளே... நாய் பொழப்புடா, எப்போதான் லெட்சுமி கண்ண தொரப்பளோ ! சரி சரி நீ ஒன்னும் விசனபடாதே எதாவது நல்ல சவாரி வரும் என்று தேற்றினான்.

காலையிலே வீட்டுலே ராசாத்தி சொன்னது காதிலே மாறி மாறி கேட்டுகிட்டே இருக்கு "இங்கே பாருயா... நம்மளுக்கு ஒண்ணுன்னா பரவா இல்லை சமாளிச்சிகிடலாம், பச்ச புள்ளைக்கு என்ன தெரியும்... பத்து போட்டு பாத்துட்டேன் ஒன்னும் சரிக்கு வரல உச்சிக்கு அந்த டாக்டர போயி பாத்துட்டு வரலாம்". எனக்கு மட்டும் ஆசையில்லையா நல்ல படியா புள்ளைய பாத்துகிடனும்னு எங்கே சான் ஏறுனாதான் முழம் சறுக்குதே.... வண்டிஎல்லாம் போச்சு இனிமே என்ன சவாரி வந்து என்ன பண்ண போறேனோ.

எப்பா, தச்சநல்லூர் போவனும் வரியா என்ற குரல் கேட்டது. ஒரு அறுபது வயது அம்மா கையில் ஒரு பெரிய பையை வச்சிக்கிட்டு முகத்திலே புன்னகையோட... போலாம்மா என்றேன்! அவுக கையிலே இருந்த பைய வாங்கி உள்ளே வச்சிட்டு ஏறுங்கம்மா போலாம் என்றேன்.வண்டியை கெளப்பும்போது கரெக்டா அஷ்டலட்சுமி பாட்டு செல்லிலே கேட்டது... ஹலோ என்றவுடன், மச்சான் நான்தான் பேசுதேன்.. புள்ளைக்கு உடம்பு ரொம்ப கொதிக்கி.. ரொம்ப அனத்த வேற செய்தா சீக்கிரமா டாக்டருகிட்ட போலாம் என்றாள். கொஞ்சம் சமாளிசிக்கம்மா ஒரு ரெண்டு மணி நேரத்துலே எப்படியாவது காசோட வந்த்துருதேன்னு சொல்லிட்டு கட் செய்தேன்.

என்னப்பா ஆச்சு என்றாள் அந்த அம்மா.. ஒன்னும் இல்லைம்மா புள்ளைக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை; நீங்க எங்கே இருந்து வாரீய என்றேன்.

என் மவ வீடு மெட்ராசிலே இருக்கு அங்கே ஒரு மூணு மாசம் இருந்துட்டு இப்போதான் வாரேன் என்றாள். கதிரு யோசித்தான், வேற சவாரி வருமான்னு தெரியலை காசு வேணும் அந்தம்மா கழுத்திலே கையிலே எல்லாம் நல்ல பெரிய நகைங்க, கண்டிப்பா வசதியானவுக மாதிரிதான் தெரியது ஆபத்துக்கு பாவம் இல்லைனு ஒரு முடிவுக்கு வந்தான். எம்மா ஒரு சங்கதி... இந்த பக்கம் ஏதோ மாநாடுன்னு வழியெல்லாம் அடைச்சுட்டாக அதனால டவுன் சுத்திதான் போவனும் கூட நூறு ரூவா ஆவும் என்றான். சரிப்பா பரவா இல்லை எனக்கு சீக்கிரம் வீட்டுக்கு போவனும் ஒரே கசகசனு இருக்கு வண்டிய விடு என்றாள்.

வீட்டை பாத்து வச்சிக்கிட்டு அப்புறமா கையிலே காசு வந்தவுடனே கொண்டு போயி கொடுத்துட்டு மன்னிப்பு கேட்டுகுடலாம்; வேற வழி இல்லை... அப்பா! சுடலை என்னை மன்னிச்சிருப்பா என்று மனதிற்குள் வேண்டி கொண்டான். தெரிஞ்ச சந்து பொந்தெல்லாம் சுத்தி பொறுமயா கொண்டு வந்து வீட்டு முன்னாடி நிறுத்தினான்.

எவ்ளோப்பா தரணும் என்று கேட்டவளிடம் நூத்தி எழுவது ரூவா ஆச்சிமா.. கொஞ்சம் கூட போட்டு எரநூறுவாயா குடும்மா என்றான். எதுவும் பேசாமல் பணத்தை எடுத்து கொடுத்தாள் எண்ணி பாத்தபோது முன்னூறு இருந்தது. என்னம்மா நூறு ரூவா அதிகமா இருக்கு என்றேன்... பரவா இல்லைப்பா குழந்தைக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னேல வச்சிக்கப்பா என்றாள்.
பளாரென்று யாரோ கன்னத்தில் அடித்தது போல் இருந்தது. அப்படியே காலில் விழுந்தேன், என்னை மன்னிச்சிரும்மா நான் பொய் சொல்லி சுத்தி கூட்டிகிட்டு வந்தேன் எனக்கு வேற வழி தெரியலை என்றேன். எனக்கு தெரியும், நேத்து ராத்திரி என் பையன் கிட்டே பேசும்போது கூட இந்த மாதிரி எதுவும் சொல்லலை அவன் என்றாள் புன்னகை மாறாமல்.

காசு வரும் போது நானே வந்து குடுத்துருதேன் என்றவனை பாத்து உன்னால முடிஞ்சா குடுப்பா இல்லேன்னா உங்க அம்மா குடுத்ததா நெனச்சிக்கோ என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அம்மா உங்க பேர கூட நான் கேக்கலை என்றதற்கு திரும்பி பார்த்து "லெட்சுமி" என்றாள்.

3 comments:

  1. நான் கட்டுரை என்று நினைத்து ஓடோடி வந்தேன்.

    சிறுகதை யா. எஸ்கேப்

    ReplyDelete
  2. நன்றி உலவு.காம்...

    சிறுகதை மீது என்ன அவ்வளவு வெறுப்பு ராம்ஜி!!!

    ReplyDelete

பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க!!!